• 1.    1952 ம் வருடம் சுவாமி ராமதாசரின் தாமரை திருவடிகளில் இந்த பிச்சைக்காரன் இறந்து விட்டான். அதன் பிறகு இவனின் ஒவ்வொரு எண்ணமும் சொல்லும் செயலும் இந்த பிரபஞ்சத்தை இயக்கிவரும் தந்தையினாலேயே இயக்கப்பட்டு வருகிறது.
  • 2.    இந்த பிச்சைக்காரனின் ஒவ்வொரு அசைவும் சிறியதோ பெரியதோ அது என் தந்தையின் பணியுடன் இணைந்ததே. வெறும் உடல் அசைவு அல்ல. இந்த பிரபஞ்சமும் அதிலுள்ள எல்லாமும் ஒன்றுக்கொன்று இணைந்த ஒரு முழுமையே. இங்கிருக்கும் பொருட்களை இவன் ஏதேனும் மாற்றி அமைத்தால் உடனே சூழ்நிலையே மாறிவிடும். பிரபஞ்ச அளவில் அதன் பாதிப்பு இருக்கும். இவன் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இந்த பிச்சைக்காரன் மாற்றங்களை விரும்புவது இல்லை.
  • 3.    சுவாமி ராமதாசரின் காலடியில் இறந்த பிறகே இவன் உயிர்வாழ்க்கை தொடங்கியது.-என்ன! அதிலிருந்தே இவன் இந்த மாதிரியான உன்மத்த நிலையிலேயே வெகுகாலமாக வாழ்ந்து வருகிறான்.இவன் ஒரு பைத்தியம். அந்த பைத்திய நிலையில் என்ன செய்வான்?ஏது செய்வான்?என்பது தெரியாது! எல்லாம் தந்தைக்கே தெரியும். சில சமயம் மற்றவர்கள் இவன்மேல் வைக்கும் நம்பிக்கையைத் தகர்த்தெறியும்படிகூட நடப்பது உண்டு. ஆனால் பூர்வ ஜன்ம புண்ணியம் உள்ளவர்களும் ஏற்கனவே மகாத்மாவுடன் வாழ்ந்தவர்களும் இவன் மேல் அன்பு வைத்து இவனுக்காகவே சேவை செய்பவர்களும் இவனை விட்டு எக்காலத்தும் நீங்கமாட்டார்கள். எல்லாம் தந்தையின் லீலையே! என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு எதுவும் இல்லை. வேறு எவரும் இல்லை.
  • 4.    இங்கு வரும் மக்கள் அனைவரையும் பார்த்து அருகில் கூப்பிட்டுப் பேசிப் பழகுவது என்பது இந்த பிச்சைக்காரனின் வேலையில் மிகமிகச் சிறிய பகுதியே. இவனுடய முழு நேர வேலை மிகவும் ரகசியமானது.அது பிரபஞ்ச அளவில் நடைபெறுகிறது. யாரும் அறியாமலேயே செய்யப்படுகிறது.
  • 5.    இந்த பிச்சைக்காரன் ஒரு வேலையும் செய்வது இல்லை. இவனால் சமுதாயத்திற்கு ஒரு உதாரணமாய் வாழ்ந்து காட்ட முடியாது. இந்த பிச்சைக்காரன் குளிப்பது கூட இல்லையெ! இவன் வெறுமனே சாப்பிடுவது , நீங்கள் யாராவது கொடுக்கும் காசில் சிகரெட் வாங்கி புகைப்பது அல்லது தூங்குவது - இதைத்தான் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறான்.
  • 6.    “அவதூதர்கள்” என்று சொல்லப்படும் ஞானிகள் பெரிய மகாத்மாக்கள். அவர்கள் எந்த விதிக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அதனாலேயே அவர்களால் உதாரண புருஷர்களாய் இருக்க முடியாது.
  • 7.    காஞ்சி பரமாச்சார்யர் ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்ற பெரிய மகாத்மாக்களும் மற்ற சில மடாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் நம்மையறிந்த முக்தபுருஷர்களாய் இருந்தாலும் சாஸ்திரங்கள் சொல்வதன்படி நடப்பவர்கள். அவர்களே சமுதாயத்திற்கு முன் மாதிரியாக நின்று வழிகாட்டுவர். ஆனால் சில சமயங்களில் தந்தை ( தன்னை சுட்டிகாட்டிய வண்ணம்) இது போன்ற பிச்சைக்காரர்களையும் அனுப்புவது உண்டு. எங்களை போன்றவர்கள் ( அப்போது சன்னதி தெரு வீட்டு வாசல் வழியே சில பன்றிகள் சென்று கொண்டு இருந்தன) ஓ! சரி, சரி ! எங்களை போன்றவர்களுக்கு அதோ அந்த வராகம் மாதிரி அங்கங்கு உள்ள வேண்டாத அழுக்குகளை சாப்பிடுவதே வேலை.
  • 8.    நீங்கள் ஒரு காரியத்தைச் செய்வது ஒரு மாதிரி. அதே காரியத்தை இந்த பிச்சைக்காரன் செய்தால் அது வேறு மாதிரியாகிவிடும். இரண்டும் ஒன்றல்ல.
  • 9.    யோகி ராம்சுரத்குமார் எங்கிருக்கிறார்? ( மலர்ந்த புன்சிரிப்பு)—(சுற்றி இருக்கும் அன்பர்களை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் சிரிப்புடன் தன் தலையில் இருந்து பாதம் வரை சுட்டிகாட்டியவண்ணம்) அவர் இதிலிருந்து இதுவரை மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள்! யோகி ராம்சுரத்குமார் இங்கு, அங்கு, எங்கும் இருக்கிறார். அவர் உங்கள் எல்லோர் இடத்திலும் இருக்கிறார். நீங்கள் அனைவரும் அவரிடத்தில் இருக்கிறீர்கள். இந்த பிச்சைக்காரன் இல்லாத இடமே இல்லை.
  • 10.    ( சன்னதி தெரு வீட்டை காட்டி ) இது என் தந்தையின் குடிசையே! தந்தைதான் இந்த பிச்சைக்காரனுக்கு உணவு அளிக்கிறார். தந்தைதான் இவனை பார்த்துக் கொள்கிறார்.











Connect With Us